"கம்யூனிசத்தால் மக்கள் ஏழ்மையில் மடிவார்கள்.. நாடே சீரழியும்" - டிரம்ப்
உலகப் போர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களை விடவும் அமெரிக்காவுக்குள் பரவி வரும் கம்யூனிசமே நாட்டின் இருப்புக்கு மிக ஆபத்தான அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், கம்யூனிசம் என்பது ஒரு பேரழிவு என்றும், அது தற்போது புதிய பெயர்களில் சமூகத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது என்றும் சாடினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
"நான் மட்டும் ஒருவேளை கம்யூனிஸ்டாக இருந்திருந்தால், வரலாற்றிலேயே லெனினை விடப் புகழ்பெற்ற ஒரு தலைவராக உருவாகியிருப்பேன்.
வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு இலவசமாக வீடு வழங்குவோம் என்று அவர்கள் நம்ப வைப்பார்கள். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்த அடுத்த 12 மாதங்களுக்குள் மக்கள் எவ்வளவு பெரிய வறுமையில் மூழ்கித் தவிக்கப் போகிறார்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.
கம்யூனிசப் பாதையை நோக்கி ஒரு சமூகம் சென்றுவிட்டால், அங்கிருந்து மீண்டும் திரும்புவது சாத்தியமற்றது. இறுதியில் மக்கள் கடுமையான ஏழ்மையிலேயே மடிய நேரிடும்.
ரேடிக்கல் சோசலிஸ்டுகள், சோசியல் டெமாக்கிரட்கள் என்ற வார்த்தைகள் எல்லாம் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் நாட்டைச் சீரழிக்கும் மிக ஆபத்தான சக்திகள்.
அமெரிக்காவில் வாழும் லத்தீன் அமெரிக்கா மக்கள், கடந்த காலங்களில் தங்களது சொந்த நாடுகளில் கம்யூனிசத்தின் கொடுமைகளை நேரடியாக அனுபவித்துவிட்டு வந்தவர்கள் என்பதால் தான், அவர்கள் தற்போது எனக்கு அதிகளவில் ஆதரவளித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் எனது அரசியல் எதிரிகள் இந்த கம்யூனிச சித்தாந்தங்களை மறைமுகமாக ஊக்குவித்து ள் நாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.
சுதந்திரச் சந்தை முதலாளித்துவக் கொள்கை மூலம் மட்டுமே அமெரிக்காவைத் தொடர்ந்து ஒரு செல்வந்த நாடாகத் தக்கவைத்துக் கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கருத்தை தான் டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் சர்வதேச மேடைகளில் தீவிரமாகப் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் தனது பதவியைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி மற்றும் meme coins மூலம் 1.4 பில்லியன் டாலர் (ரூ.11,800 கோடி) வரை சொந்தமாக பணம் ஈட்டியதாக அண்மையில் வெளியான நிதிநிலை அறிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.