மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வரவு வைப்பு

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15ம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

தற்போது, தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 15ம் தேதியான இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்தது.

ரூ.1000 உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்படும் என்ற தகவலும் கசிந்தது.

மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவி தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்ட நிலையில், இன்று மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.

ஆனால், மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர்," மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

அதனால், மே மாத மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்" என்றார்.

தவெக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கப்படும் என தேர்தலின்போது விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel