ஜெயலலிதா இருந்திருந்தால், நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடாமல் செய்திருப்பார் - சசிகலா
சென்னை,
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் மே 3–ந்தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருப்பது தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதியன்று நாடு முழுவதும் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், மறுதேர்வுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள நிலையில், ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்துப் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ரத்து அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் என்பதால், நீட் தேர்வு விலக்கு அவசியம் என புரட்சித்தலைவி அம்மா தான் முதன் முதலில் வலியுறுத்தியிருந்தார். தமிழக கிராமப்புற ஏழை மாணவர்கள் எப்படியாவது மருத்துவராகும் கனவை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிதும் பின்வாங்காமல் நீட் தேர்வில் எப்படி வெற்றிபெறுவது என்பதை தாங்களாகவே முயற்சித்து, வேறு வழியின்றி தங்களை அதற்கு தயார்படுத்தி கொண்டு நீட் தேர்வை எதிர்கொண்டு வரும் வேளையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வு நடைமுறையில் ஏதாவது ஒரு குளறுபடி தொடர்ந்து ஏற்படுவது, மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு முறையில் ஒரு சிலர் குறுக்கு வழிகளில் மருத்துவ இடம் பெற்று விடுகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இது போன்று நீட் தேர்வு நடைமுறை பற்றி நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதால் தமிழக கிராம்ப்புற ஏழை மாணவர்கள், நீட் தேர்வால் பாதிப்படைவதாக கருதி, அதை ஏற்று கொள்வதில் விருப்பம் இல்லாத காரணத்தால், நீட் தேர்வை நீக்கிடவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
புரட்சித்தலைவி அம்மா மட்டும் இருந்திருந்தால், நீட் தேர்வே தமிழகத்தில் நுழைய விடாமல் செய்திருப்பார்கள். இதன் காரணமாக, ஒவ்வொரு கிராமப்புற ஏழை மாணவர்களும், நம் புரட்சித்தலைவி அம்மா இன்று நம்மோடு இல்லையே என்று ஏங்குகிறார்கள்.
எனவே, நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் மறுதேர்வை எவ்வித குளறுபடியும் இன்றி நடத்த வேண்டும் என மாணவ- மாணவியர்களின் சார்பாக மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், கிராமப்புற ஏழை மாணவச்செல்வங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மட்டுமாவது நீட் தேர்வை நீக்கிடும் சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து, விரைந்து செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பகிரவும்: