தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் மாநில அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக கூறி திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது. மாற்றுக் கட்சியினரையும் அவர்களின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகச் சாடி ஆ.ராசா பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தோழமைக்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ள சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருக்குறள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

என்ற திருக்குறளை அவர் எவ்விதக் கூடுதல் விளக்கமுமின்றிப் பதிவிட்டுள்ளார்.

ஒருவர் எதைக் காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும், இல்லையெனில் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர் என்பதே இதன் பொருளாகும். திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதே திமுகவின் மூத்த பெண் தலைவரும் எம்பியுமான கனிமொழி இந்தத் திருக்குறளைப் பதிவிட்டிருப்பது அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்று வருகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel