ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க நிபந்தனை பட்டியல் தயாரிக்கும் ஈரான்
மத்தியஸ்தர்கள் தெஹ்ரானிடம் நிபந்தனைகளை வகுக்குமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைகளின் பட்டியலை ஈரான் தயாரித்து வருவதாகவும், பிராந்திய போரை முடிவுக்கு கொண்டுவருவது அவற்றில் ஒன்று எனவும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு குழுவின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தெரிவித்தார்.
அந்த நீர்வழிப்பாதை வழியாக ஒரு கப்பல் போக்குவரத்து வழித்தடம் அமைக்க ஓமனுடன் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த பாதையின் சில பகுதிகள் ஓமன் கடல் பகுதியிலும், சில பகுதிகள் ஈரான் கடல் பகுதியிலும் அமையும் என்றும் ரெசாயி கூறினார்.
அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், கப்பல்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு மைய கால்வாயை பயன்படுத்தும் என்று அல் மனார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மொழிபெயர்ப்பாளர் மூலம் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை அன்று, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்பு படையினர், நீரிணையின் கட்டுப்பாட்டையும் அதன் வருவாயையும் எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பது குறித்து இரு நாடுகளும் உடன்பாடு எட்டியுள்ளதாக கூறியதை தொடர்ந்து, அந்த நீர்வழிப்பாதை தொடர்பான ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரானும் ஓமனும் இன்னும் இறுதிசெய்து வருவதாக ஒரு மூத்த வட்டாரம் தெரிவித்தது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா நீக்கி, இழப்பீடு வழங்கி, தடைகளையும் அகற்றினால் ஒழிய, நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காது என்று பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிப்ரவரியில் போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த நீர்வழிப்பாதை உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கை கொண்டு சென்றது. அதன் பிறகு, இந்த நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் நின்றுவிட்டது.
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்காவும், ஈரானும் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தங்கள் கடல்வழி போக்குவரத்தை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்டவையாக இருந்தன, ஆனால் அவை நிலைக்கவில்லை.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel