10 வீரர்களுடன் விளையாடிய சுவிட்சர்லாந்தை 3-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா
பி.ஃபா உலக கோப்பை கால்பந்தின் கடைசி காலிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா- சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் இந்த கோலை அடித்தார். அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 1-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் அந்த அணியின் டான் என்டோய் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது.
72-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ப்ரீல் எம்போலோ ரெட்கார்டு மூலம் வெளியேற்றப்பட்டார். என்றாலும், சுவிட்சர்லாந்து 10 வீரர்களுடன் கடுமையாக போராடியது. 90 நிமிடங்கள் வரை அர்ஜென்டினாவை கோல் அடிக்கவிடவில்லை.
இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. முதல் 15 நிமிடத்தில் கடுமையாக போராடி அர்ஜென்டினாவை கோல் அடிக்கவிடாமல் தடுத்தது. அதன்பின் மீண்டும் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரஸ் கோல் அடித்தார். அதன்பின் 120+1 நிமிடத்தில் மார்ட்டினஸ் கோல் அடிக்க அர்ஜென்டினா 3-1 என சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
15-ந்தேதி நள்ளிரவு நடைபெறும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது அர்ஜென்டினா. 14-ந்தேதி நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பிரானஸ்- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் தொடர்ச்சியாக கோல் அடித்து வந்த மெஸ்சி இன்றைய போட்டியில் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
அர்ஜென்டினா ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் கேப் வெர்டேவையும், ரவுண்ட் ஆப் 16 சுற்றில் எகிப்தையும் 3-2 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
காலிறுதியில் இங்கிலாந்து நார்வே அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.