டி20 அணியில் சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்.. கௌதம் கம்பீரின் எதிர்காலத் திட்டம்!
இந்திய டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அவரது எதிர்கால திட்டம் குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சமீபத்திய அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சொதப்பியதால், ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ மீட்டிங்கில் பேசிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "சஞ்சு சாம்சனுக்கு தற்போது 31 வயதாகிறது, இந்த நவம்பர் மாதத்தில் 32 வயதாகிவிடும். அடுத்த டி20 உலகக் கோப்பை 2028-ல் நடைபெறும்போது அவர் 34 வயதை நெருங்கிவிடுவார்.
எனவே, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு நிரந்தர ஓப்பனர்களாக விளையாடக்கூடிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களை இப்போதிருந்து வளர்த்தெடுப்பதே சரியான முடிவாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, இந்திய அணி விளையாடிய டி20 போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. குறிப்பாக, ஜூன் 26 மற்றும் 28 தேதிகளில் அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகளிலும், அதனைத் தொடர்ந்து ஜூலை 4-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் (5, 0, 1 ரன்கள்) எனத் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சொதப்பியது அணியின் பலவீனமாக அமைந்தது.
வயது மற்றும் ஃபார்ம் என இரண்டும் சாதகமாக இல்லாததால் தான் இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டி20 அணியில் இடம் பறிபோனாலும், சஞ்சு சாம்சனை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முழுமையாகப் பயன்படுத்த கம்பீர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுல் பகுதி நேர கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
அவரை பேட்டராக மட்டும் ஆட வைத்துவிட்டு, சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் ஒரு முழுநேர விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக களமிறக்க கம்பீர் பிசிசிஐ-யிடம் ஆலோசித்து வருகிறார்.