நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும்போது, மாநில அரசுகளுக்கான இட ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது - மத்திய அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க. அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
“ஒரு மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்காக, குறிப்பாக தமிழ்நாடு மாணவச் செல்வங்களின் கல்வி மேன்மைக்காக எம்.ஜி.ஆர். தனியார் பொறியியல் கல்லூரிகளையும், மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கியதன் மூலம், பொறியியல் துறையிலும், மருத்துவக் கல்வியிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
ஜெயலலிதா கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 69 சதவீத இட ஒதுக்கீடு; நீட் நுழைவுத் தேர்வினால் பாதிக்கப்பட்ட, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்கிடும் வகையில், எனது தலைமையிலான அரசு கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் சமூக சமத்துவம் தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிலை நாட்டப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். அரசுக்கு எந்த செலவுமின்றி தனியார் கல்லூரிகளில் உள்ள படிப்பு இடங்களில் 50% மாநில அரசிற்கு தரவேண்டும் என்று சட்டம் இயற்றினார். இதனால் தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் ஆண்டுதோறும் 100 பேர் முதல் 500 பேர் வரை பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் பட்டம் பெற்றுவந்த நிலையில், தற்போது லட்சக்கணக்கான பொறியாளர்களும், பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும் உருவாகி வருகின்றனர்.
இதன்மூலம் பொறியியல் துறையிலும், மருத்துவக் கல்வியிலும், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2011-ல் விடியா திமுக ஆட்சியில் 1,945 ஆக இருந்த அரசு MBBS மருத்துவ இடங்கள், 2021-ல் எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில், அரசு MBBS மருத்துவ இடங்கள் சுமார் 5,500-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது சாதனையாகும்.
2011 முதல் 2021 வரை 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. சிதம்பரம் மற்றும் பெருந்துறையில் இருந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்பட்டு மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன.
குறிப்பாக, எனது தலைமையிலான அரசு ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று அதன்மூலம் 1,650 MBBS மருத்துவ இடங்களை கூடுதலாகப் பெற்று சாதனை படைத்தது. எங்களது ஆட்சிக்குப் பிறகு, 2021 முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சுமார் 600-க்கும் மேற்பட்ட MBBS இடங்கள் குறைகின்றன என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவதால் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க
தற்போதைய த.வெ.க. அரசு முற்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பையும், தரத்தையும் மேம்படுத்தி ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலான இடங்களைப் பெற மத்திய அரசை நாடி அனுமதி பெறவேண்டும்.
இதன்மூலம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களால் குறையக்கூடிய மருத்துவ இடங்களை ஈடுகட்ட முடியும். மேலும், இந்தியா முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கோ, பொறியியல் கல்லூரிகளுக்கோ நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும்போது, மாநில அரசுகளுக்கான இட ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்ற நிபந்தனையை மத்திய அரசும், யு.ஜி.சி-யும் விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சட்டத்தில் இடமில்லை என்றால் உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள, தற்போதைய த.வெ.க. அரசும் வலியுறுத்த வேண்டும். அனைத்து மக்களின் உயிரைக் காப்பது மருத்துவர்கள் என்பதை நினைவில் கொண்டு, இன்றுவரை மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது என்ற நிலை, மேலும் தொடர்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று த.வெ.க. அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.