மகாராஷ்டிராவில் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ‘ஸ்டிங் எனர்ஜி’ பானங்கள் விற்பனை செய்ய தடை
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளின் 500 மீட்டர் சுற்றளவில் ‘ஸ்டிங் எனர்ஜி’ எனப்படும் கூல் டிரிங்ஸ் பானத்தை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் நர்ஹரி ஜிர்வால், எனர்ஜி பானங்களால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், “இந்த தடையை அமல்படுத்துமாறு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (FDA) உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் எனர்ஜி பானங்களை அருந்துவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, எனர்ஜி பானங்களில் பெரும்பாலும் காஃபின் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளது.
பள்ளி வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இதுபோன்ற எனர்ஜி பானங்கள் அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இதுகுறித்த முன்மொழியப்பட்ட கட்டுப்பாட்டை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதோடு, பள்ளி அளவில் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அரசு வலுப்படுத்தும் என்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் கூறினார்.