லாக்கப் மரணம் தற்கொலையாக இருந்தாலும் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்
காவல் நிலையத்தில் நிகழும் மரணம் தற்கொலையாக இருந்தாலும், அதற்கான முழு பொறுப்பையும் அந்த மாநில அரசு பொறுப்பேற்று, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் உள்ள கராவல் காவல் நிலையத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டு 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து மறுநாள் காலை, அந்த இளைஞர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தனது மகனை, உதவி ஆய்வாளர் உடல்ரீதியாக தாக்கி துன்புறுத்தியதாகவும், மேலும் அவரை விடுதலை செய்ய ரூ.30,000 வரை கேட்டதாகவும் உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறினார்.
மேலும் தனது மகன் உயிரிழந்ததால், இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரியும், அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி சச்சின் தத்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “வன்முறை, அலட்சியம், விளக்கமுடியாத சூழ்நிலைகள் அல்லது தற்கொலை என எதுவாக இருந்தாலும், காவலில் நிகழும் எந்தவொரு மரணமும் நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
ஏனெனில் அது தனிமனித கண்ணியத்தின் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புகிறது.
ஒருவர் காவலில் இருக்கும்போது, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகளை அவர் இழப்பதில்லை.
காவலில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணத்திற்கு, சட்டப்பூர்வமான திட்டங்களை காரணம் காட்டியோ அல்லது நேரடி குற்றமின்மையை வாதிட்டோ அரசு தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது.
தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் தந்தையான மனுதாரருக்கு ரூ.18,44,000 இழப்பீடு தொகையை முதல் எட்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.