சிங்கப் பெண் விளக்க வீடியோவில் தமிழில் எழுத்து பிழை : வானதி சீனிவாசன் கண்டனம்
சென்னை,
தமிழகத்தில் புதிதாக த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றவுடன் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமும் ஒன்று.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தநிலையில் நிகழ்ச்சி தொடங்குமுன் தவறுகளுடன் வெளியிடப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரப்படை அதிரடிப்படை விளக்க வீடியோ வெளியிடப்பட்டது. ஏ.ஐ. மூலமாக தயாரிக்கப்பட்ட வீடியோவில் நிறைய எழுத்து பிழைகள் இருந்தது.
ஏஐ காணொளியில் எழுத்து பிழைஇந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இன்று முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.
அலட்சியம்பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என அதில் பதிவிட்டுள்ளார்.
பகிரவும்: