கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்- வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சிறுவாணியில் 7 மி.மீ., அடிவாரம் பகுதியில் 10 மி.மீ. வீதம் மழை அளவு பதிவாகி உள்ளது. இந்த அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
அணையில் நேற்றைய நிலவரப்படி 30.57 அடிக்கு நீர் இருப்பு காணப்பட்டது. இருந்தபோதிலும் கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய இடி மழைக்காலம் தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பாலக்காட்டு கணவாய் மேற்கு எல்லை பகுதிகளில் ஆங்காங்கே சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் படிப்படியாக வேகம் பிடித்து, அக்டோபர் முதல் வாரத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
அடுத்த 3 மாதங்களில் சேமிக்கும் ஒவ்வொரு சொட்டு மழைநீரும், அடுத்தாண்டு பிப்ரவரி-மே மாதங்களில் வரவிருக்கும் சூப்பர் எல் நினோ காலகட்டத்தை சமாளிக்க உதவியாக இருக்கும். எனவே மழை பெய்யும்போது தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
கோவை மாவட்டம் கோடைக்காலத்தில் கண்டிப்பாக தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே மழைநீரை நிலத்தடி நீர்த்தொட்டிகளில் சேகரித்து வைப்பது அவசியம். இதுதொடர்பாக கோவை மாநகராட்சி முன்கூட்டியே மழைநீர் சேகரிப்பை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel