7,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி - அனைத்து கல்லூரிகளிலும் ஹெச்.ஐ.வி. சோதனை நடத்த கர்நாடக அரசு உத்தரவு!

கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து கல்லூரிகளிலும் ஹெ.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு மற்றும் விஸ்வேஷ்வராய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்கின்றன.

கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கத்தின் தரவுகளின்படி, அங்கு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட மக்களிடையே எச்.ஐ.வி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வயதினரிடையே எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023-24ல் 44,500 ஆக இருந்தநிலையில், 2025-26ல் 66,600 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது.

மாநிலத்தில் சுமார் 2.60 லட்சம் பேர் எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 54 ஆயிரம் பேர் பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.

மாணவர்களின் ரகசியம் மற்றும் தனித்தன்மையை காக்கும் பொருட்டு, க்யூஆர் கோட் அடிப்படையிலான அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை எளிதாகக் கேட்டுத் தெளிவுபெறலாம்.

இந்த முகாம்கள் கல்லூரிகளில் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டாலும், தனிநபரின் அல்லது மாணவர்களின் சம்மதம் இல்லாமல் எந்தப் பரிசோதனையும் செய்யப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel